சேதமடைந்த கோம்பூர் பாசன வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த கோம்பூர் பாசன வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர், பிப்.10-
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த கோம்பூர் பாசன வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோம்பூர் பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூரில் மாதாகோவில் கோம்பூர் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்கால் மூலம் வெண்ணாற்றிலிருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று அப்பகுதி விவசாயிகள் நெல் மற்றும் உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் மாதாகோவில் கோம்பூர், காக்கையாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது.
சேதமடைந்த மதகு-தடுப்புசுவர்
இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளாக பாசன வாய்க்கால் மதகு மற்றும் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. மேலும் பாசன வாய்க்கால் மதகின் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் குறுகலான வளைவு சாலையில் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
எனவே சேதமடைந்த மாதாகோவில் கோம்பூர் பாசன வாய்க்கால் மதகினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகினை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக பாசன வாய்க்கால் மதகு மற்றும் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story