ஆபத்தான பாதையில் மாணவ-மாணவிகள் செல்லும் அவலம்


ஆபத்தான பாதையில் மாணவ-மாணவிகள் செல்லும் அவலம்
x
தினத்தந்தி 9 Feb 2022 10:38 PM IST (Updated: 9 Feb 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

மூவலூரில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி கிடப்பில் கிடப்பதால் ஆபத்தான பாதையில் மாணவ-மாணவிகள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை:

மூவலூரில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி கிடப்பில் கிடப்பதால் ஆபத்தான பாதையில் மாணவ-மாணவிகள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே பாலம்

மயிலாடுதுறை அருகே கும்பகோணம் சாலை மற்றும் கல்லணை சாலையை இணைக்கும் வகையில் மூவலூர்- சோழம்பேட்டை இடையே இணைப்பு சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலை மயிலாடுதுறை நகருக்கு புறவழிச்சாலையாகவும் அமைந்துள்ளது. கும்பகோணம் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் வாகனங்களை கல்லணை சாலை வழியாக திருப்பி விடுவது வழக்கம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த இணைப்பு சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பழுதடைந்த பழமையான பாலம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டது. காவிரி ஆற்று பாலம் மற்றும் முத்தப்பன் வாய்க்கால் பாலம் ஆகியவற்றிற்கு சேர்த்து ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் இங்கு புதிய பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இருந்த பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சில மாதங்கள் நடந்த அந்த பணி, பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆபத்தான பாதையை கடக்கும் மாணவ-மாணவிகள்

இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலைக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக கல்லணை சாலையில் உள்ள மாப்படுகை, சோழம்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் மூவலூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.மேலும் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் மூவலூர், சித்தர்காடு பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்களில் பலர் படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவ-மாணவிகள் சோழம்பேட்டை- மூவலூர் இடையே உள்ள இணைப்பு சாலை வழியாக கடந்து சென்றால் மிக விரைவாக பள்ளி, கல்லூரிகளுக்கு எளிதில் செல்லலாம். இல்லை என்றால் மயிலாடுதுறை நகருக்குள் சென்று 5 கி.மீ. சுற்றி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நடவடிக்கை  எடுக்க வேண்டும்

நீண்ட தூரம் சுற்றி செல்வதை தவிர்க்க, புதிய பாலம் கட்டப்பட உள்ள இடத்திற்கு அருகில் உள்ள கதவணை பாலத்தின் குறுகிய வழியில் ஆபத்தான பாதையை மாணவ- மாணவிகள் கடந்து செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் ஆற்றுக்குள் விழுந்து ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.எனவே மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கிடப்பில் போடப்பட்டுள்ள மூவலூர் காவிரி ஆற்று பாலத்தை உடனே கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story