மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
சிவகங்கை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிக்குட்பட்ட 275 வார்டுகளில் நடைபெறுகிறது. தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இவை சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் நேற்று சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகளும், இளையான்குடி, நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், புதுவயல், சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 பேரூராட்சிகளும் உள்ளன. இவைகளில் மொத்தம் 285 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதில் 9 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு வார்டுக்கு யாரும் போட்டியிடவில்லை. இந்த 10-வார்டு போக மீதமுள்ள 275 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
இந்த வார்டுகளுக்கு தேவையான கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவை தற்போது அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரம் தவிர அவசர தேவைகளுக்காக கூடுதலாக 20 சதவீதம் சேர்த்து அனுப்பப்படுகிறது.
இதன் அடிப்படையில் சிவகங்கை நகராட்சிக்கு தேவையான 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரத்துடன் கூடுதலாக 10 எந்திரங்களும் சேர்த்து 60 எந்திரமும், காரைக்குடி நகராட்சிக்கு 97 எந்திரத்துடன் கூடுதலாக 20 சேர்த்து 117 எந்திரங்களும், தேவகோட்டை நகராட்சிக்கு 49 எந்திரங்களுடன் கூடுதலாக சேர்த்து 59 எந்திரங்களும் மானாமதுரைக்கு தேவையான 30 எந்திரங்களுடன் கூடுதலாக 6 சேர்த்து 36 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இது தவிர 20 சதவீத கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாடு எந்திரம் சேர்த்து இளையான்குடி பேரூராட்சிக்கு 32 எந்திரங்களும், நாட்டரசன் கோட்டைக்கு 15 எந்திரங்களும், திருப்புவனத்திற்கு 30 எந்திரங்களும், கானாடுகாத்தானுக்கு 14 எந்திரங்களும், கண்டனூருக்கு 18 எந்திரங்களும், கோட்டையூருக்கு 21 எந்திரங்களும், பள்ளத்தூருக்கு 14 எந்திரங்களும், புது வயலுக்கு 18 எந்திரங்களும், நெற்குப்பைக்கு 14 எந்திரங்களும், சிங்கம்புணரிக்கு 26 எந்திரங்களும், திருப்பத்தூருக்கு 36 எந்திரங்களும் என மொத்தம் 510 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story