பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்


பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2022 11:18 PM IST (Updated: 9 Feb 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் விரைவில் தொடங்க இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1,000 டன் ஒதுக்கீடு
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1000 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது தேங்காய் பருப்பு விலை 1 கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவை கொப்பரை தேங்காய் விலை 1 கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை தேங்காய் 1 கிலோ ரூ.110-க்கும், 6 மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பதிவு செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் இந்த திட்டம் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற உள்ளது. கொப்பரை தேங்காய்க்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டு உள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story