திருக்கோவிலூர் நகராட்சியை அலங்கரிக்கும் முதல் தலைவர் யார்?


திருக்கோவிலூர் நகராட்சியை அலங்கரிக்கும் முதல் தலைவர் யார்?
x
தினத்தந்தி 9 Feb 2022 11:25 PM IST (Updated: 9 Feb 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் நகராட்சியை அலங்கரிக்கும் முதல் தலைவர் யார் என்பது குறித்து தொிந்து கொள்ள காத்திருக்க வேண்டும்.

வரலாற்றிலும் புகழ்பெற்றதும், ஆன்மீகத்தில் பிரசித்திபெற்றதுமான திருக்கோவிலூர் கடந்த 1896-ம் ஆண்டு முதல் ஊராட்சியாகவும், 1952-ம் ஆண்டு முதல் பேரூராட்சியாகவும் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு திருக்கோவிலூர் நகராட்சியாக தரம் உயர்ந்தது. 
பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய 5 வருவாய் கோட்டாட்சியர் அலுவலங்கள் மட்டுமே இருந்தன. இன்றைய விழுப்புரம் மாவட்ட தலைநகரம் திருக்கோவிலூர் வருவாய் கோட்டத்தின் கீழ்தான் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் விழுப்புரம் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகிவிட்ட நிலையில் திருக்கோவிலூர் மட்டும் இன்னமும் அப்படியே உள்ளது.
18 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த திருக்கோவிலூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் 27 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள்.  இங்குள்ள மொத்த வாக்காளர்கள் 26,649 ஆகும். இதில் 12,887 ஆண் வாக்காளர்களும், 13749 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இங்கு வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 35 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
கடந்த முறை பேருராட்சி தலைவர் பதவி பொது பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தபோது தி.மு.க. சார்பில் தேவிமுருகன் தலைவராக போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக டி.குணா இருந்தார். தற்போது இங்குள்ள 27 வார்டுகளில் 11 வார்டுகள் பொதுபிரிவுக்கும், 11 வார்டுகள் பொது பெண்களுக்கும், 2 வார்டுகள் ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கும், 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில் தி.மு.க. 3 முறையும், அதி.மு.க. 1 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், சுயேச்சை 1 முறையும் திருக்கோவிலூர் பேரூராட்சியை கைப்பற்றி இருந்தன. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியும் களத்தில் மல்லுகட்டுகின்றன. 
இதுதவிர பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். இருப்பினும் திருக்கோவிலூர் நகராட்சியை அலங்கரிக்கும் முதல் தலைவர் யார்? என்பதை தெரிந்து கொள்ள அடுத்த மாதம்(மார்ச்) 4-ந் தேதி வரை காத்திருக்க வேண்டும். 

Next Story