கோவில் திருவிழாவில் மோதல்


கோவில் திருவிழாவில் மோதல்
x
தினத்தந்தி 9 Feb 2022 11:33 PM IST (Updated: 9 Feb 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குத்தாலம்:
குத்தாலம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பருத்திக்குடி கிராமத்தில் வடக்கு தெருவில் மங்கள பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி அம்மன் புறப்பாடாகி வீதியுலா நடந்தது. அப்போது வழக்கத்திற்கு மாறாக பிள்ளையார் கோவில் தெரு வழியாக விதியுலா செல்ல முயன்றபோது அந்த தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் விழா கமிட்டியை சேர்ந்த 7 பேர் அம்மனை கோவிலில் இறக்கி வைத்துவிட்டு, பிள்ளையார்கோவில் தெருவுக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் மேலபருத்திக்குடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகள் காயத்ரி (வயது 23), முத்து (75), சுமதி (40) உள்ளிட்டோர்  காயம் அடைந்தனர். காயம் அடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
3 பேர் கைது
இதுகுறித்து காயத்திரி கொடுத்த புகாரின்பேரில் பாலையூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக பருத்திகுடி வடக்கு தெருவை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் கபாலி என்கிற செல்லமுத்து (27), நாகராஜின் மகன் சத்யராஜ் (28), மனோகரனின் மகன் மணிகண்டன் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தப்பி ஓடிய மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story