கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட விருதுவிலங்கினான் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டது. அந்தக் கட்டிடத்தை திறக்காமல் பூட்டியே வைத்துள்ளனர். அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம், கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமா?
-குருமூர்த்தி, விருதுவிலங்கினான். |
கோழி இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் 25-க்கும் மேற்பட்ட கோழி, ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும், நீர்நிலைகள் அருகிலும் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. கோழி இறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். |
கோட்டை மைதானத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும்
வேலூர் கோட்டையில் உள்ள 2 விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை நேரத்தில் வேலூர் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி ஆகியவற்றை விளையாடி வந்தனர். விடுமுறை நாட்களில் பலர் விளையாடுவது வழக்கம். ஆனால் தற்போது அங்குள்ள மைதானத்தில் விளையாடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். 2-ம் நிலை காவலர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால் இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வேலூர் நகரில் வேறு விளையாட்டு மைதானம் இல்லாத காரணத்தால் விளையாட முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, வேலூர் கோட்டை மைதானத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும். |
உடைந்து தொங்கும் மின் விளக்கின் கம்பி
சோளிங்கர் ரெயில் நிலையம் உள்ள பாணாவரம் ரெயில்வே மேம்பாலத்தில் மின் கம்பங்கள் பொருத்தப்பட்ட நாள்முதல் இதுநாள் வரை மின் விளக்குகள் எரியவில்லை. மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ள மின் கம்பத்தின் ஒரு பகுதி எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? |
கூடுதல் பஸ்களை இயக்குவார்களா?
சென்னையில் இருந்து போளூருக்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பண்டிகை காலம், சுப முகூர்த்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போளூருக்கும், சென்னைக்கும் சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர். ஒருசிலர் ஆரணி அல்லது வந்தவாசி சென்று அங்கிருந்து சென்னைக்கு பஸ் பிடித்துப்போக வேண்டிய நிலை உள்ளது. எனவே சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்குவார்களா? |
ஊற்றெடுக்கும் நீரால் வழுக்கி விழும் அபாயம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் புதுப்பேட்டை கிருஷ்ணசாமி நகரில் சிமெண்டு சாலை போட்டார்கள். கிருஷ்ணணசாமி நகருக்கு அருகில் ஏரி உள்ளது. ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், கிருஷ்ணசாமி நகரில் பூமிக்கடியில் இருந்து ஊற்றெடுக்கும் நீரும், அப்பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீரும் சேர்ந்து சிமெண்டு சாலை வழியாக தினமும் ஆறாக வழிந்தோடுகிறது. இதனால் சிமெண்டு சாலையில் பாசி படர்ந்துள்ளது. வாகனங்களில் வருவோர், நடந்து செல்வோர் பாசியின் மீது ஓடும் நீரால் வழுக்கி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கிருஷ்ணசாமி நகரில் நீர் ஊற்றெடுத்து ஓடுவதை தடுக்க வேண்டும். ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். |
வாஷ்பேஷின் சரி செய்யப்படுமா?
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த வாஷ்பேஷின் உடைந்து பல நாட்களாக கீழே விழுந்து கிடக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். அதேபோல் இங்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் தண்ணீர் வரும் குழாய் சரியில்லாமல் உள்ளது. அதை, உடனடியாக சரி செய்ய வேண்டும். |