குடியாத்தம் நகராட்சி பொதுமக்களுக்கு ஓரிரு நாட்களில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம்
குடியாத்தம் நகராட்சி பொதுமக்களுக்கு ஓரிரு நாட்களில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் நகராட்சி பொதுமக்களுக்கு ஓரிரு நாட்களில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிப்பு
குடியாத்தத்தை அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள ஹைதர்புரம் பகுதியில் ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் அதில் நிரப்பப்பட்டு அதன் மூலமாக பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் நகராட்சிக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாலாற்றிலும், குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பைப்புகள் அடித்துச் செல்லப்பட்டது, பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் குடிநீர் சப்ளை செய்யும் 3 ராட்சத கிணறுகளும் அடித்துச் செல்லப்பட்டதால் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நகராட்சியில் சிறு மின்விசை பம்புகள் மூலமாகவும், டிராக்டர்கள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் குடிநீர் தேவைக்காக குடியாத்தம் நகராட்சி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பைப்புகளை சீர்செய்து கடந்த ஒரு மாதமாக ஓரளவு குடிநீர் சப்ளை செய்து வந்தனர். இருப்பினும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை.
ஓரிரு நாட்களில்
தற்போது பாலாற்றில் வெள்ளம் குறைந்ததால் இரண்டு மாதங்களாக போர்க்கால அடிப்படையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத பைப்புகளை சீர் செய்து வந்தனர். கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாக செல்லும் சேதமடைந்த பைப்புகளும் சீரமைக்கப்பட்டது.
இதுகுறித்து குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ் ஆகியோர் கூறியதாவது:-
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பைப்லைன் சீரமைக்கப்பட்டு விட்டது. இதனால் குடியாத்தம் நகராட்சி பகுதி மக்களுக்கு ஓரிரு நாட்களில் காவிரி கூட்டுக்குடிநீர் சப்ளை செய்யப்படும். ஹைதர்புரம் ராட்சத குடிநீர் தொட்டிக்கு பம்ப் செய்யப்பட்டு அங்கிருந்து குடியாத்தம் நகருக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் வருவதால் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் சில தினங்களில் தொடங்கும். பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story