மராட்டிய கூட்டணி அரசை கவிழ்க்க உதவுமாறு மிரட்டினார்கள் சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 Feb 2022 12:35 AM IST (Updated: 10 Feb 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய கூட்டணி அரசை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் என்னை மிரட்டினார்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு சஞ்சய் ராவத் எம்.பி. பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை, 
மராட்டிய கூட்டணி அரசை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் என்னை மிரட்டினார்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு சஞ்சய் ராவத் எம்.பி. பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.
ஆட்சியை கவிழ்க்க உதவி
சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சஞ்சய் ராவத் எம்.பி. இவா் மராட்டியத்தில் சிவசேனா பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை அமைக்க முக்கிய காரணமாக இருந்தவர். இவருக்கு நெருக்கமானவர் இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 
இந்தநிலையில் மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவுமாறு சிலர் தன்னை அணுகியதாக சஞ்சய் ராவத் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
சுமார் ஒரு மாதத்திற்கு முன் சிலர் என்னை அணுகினார்கள். அவர்கள் மராட்டியத்தில் ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு என்னிடம் கேட்டனர். மாநிலத்தில் இடைத்தேர்தல் வருவதற்காக அவர்களின் முயற்சிக்கு நான் உறுதுணையாக இருக்க வேண்டும் என விரும்பினர். எனினும் நான் அவர்கள் கூறியதை செய்ய மறுத்துவிட்டேன். இதற்காக நான் பெரிய விலையை கொடுக்க வேண்டியது இருக்கும் என அவர்கள் என்னிடம் கூறினர். நீண்ட காலமாக ஜெயிலில் இருக்கும் முன்னாள் ரெயில்வே மந்திரிக்கு ஏற்பட்ட நிைல எனக்கும் வரும் எனவும் கூறினர். 
மேலும் என்னை தவிர மாநிலத்தில் 2 மூத்த மந்திரிகளும் சட்டவிேராத பணப்பரிமாற்ற வழக்கில் ஜெயில் செல்ல நேரிடும் என மிரட்டினர்.
துப்பாக்கி முனையில் மிரட்டல்
மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை மற்றும் பிற மத்திய முகமைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நிச்சயமாக ஜனநாயகம் நிலவும் எந்த நாட்டிற்கும் ஆரோக்கியமானது இல்லை. 17 ஆண்டுகளுக்கு முன் எனக்கு நிலம் விற்றவர் மற்றும் அவரது குடும்பத்தினரை எனக்கு எதிராக பேசுமாறு அமலாக்கத்துறை மிரட்டுகிறது. எனது மகளின் திருமணத்திற்கு பந்தல், அலங்காரம் செய்தவர்கள் மற்றும் பிற வியாபாரிகளை நான் ரொக்கமாக ரூ.50 லட்சம் கொடுத்ததாக கூறுமாறு அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர். அலங்காரம் செய்தவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளார். 
இதுதொடர்பாக அமலாக்கத்துறை 28 பேரை சட்டவிரோதமாக பிடித்து சென்று உள்ளது. இதற்கு எல்லாம் நான் பயப்படவில்லை. தலைவணங்க போவதும் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறி கொள்கிறேன். 
ராஜ்ய சபாவிலும், சபைக்கு வெளியேயும் தொடர்ந்து உண்மையை பேசுவேன். ராஜ்ய சபா உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மிரட்டப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்றவற்றை கவனத்தில் கொள்வது மட்டுமின்றி, இதற்கு எதிராக குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். 
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
நாக்பூர் செல்ல முடியாது
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் டெல்லியில் அளித்த பேட்டியில், "நெருக்கடி நிலை பிரகடன காலத்தைவிட தற்போது எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுகிறது. அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகள் பா.ஜனதா மற்றும் அவர்களின் தலைவர்களின் குற்றச்சதிகளின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நான் ஜெயிலுக்கு போவேன் என பா.ஜனதாவினர் கூறுகின்றனர். சரி நான் ஜெயிலுக்கு போகிறேன். நீங்கள் அதிக பாவங்களை செய்து உள்ளீர்கள். எனவே ஜெயிலில் எனக்கு அருகில் நீங்களும் இருப்பீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு பயப்படவில்லை. யாருக்கு சம்மன் அனுப்ப வேண்டும், யாரை துன்புறுத்த வேண்டும் என மும்பையில் 2, 3 பேர் அமலாக்கத்துறைக்கு உத்தரவுபோடுகின்றனர். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தேவேந்திர பட்னாவிசுக்கு புரியும்." என்றார். 
இதேபோல அவர், நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கினால், உங்களால் நாக்பூருக்கு செல்ல முடியாது என கூறினார். 
நாக்பூர் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story