மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்திய 5 பேர் கொலை வழக்கில் பெண் கைது
மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்திய 5 பேர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 5 பேரையும் தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மண்டியா:
5 பேர் கொலை
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணா தாலுகா கே.ஆர்.எஸ் கிராமம் பஜார் லைன் பகுதியை சேர்ந்தவர் கங்காராம். இவரது அண்ணன் கணேஷ். சகோதரர்கள் இருவரும் சொந்தமாக வியாபாரம் செய்து வருகின்றனர். இருவரும் வெளியூருக்கு சென்றால், 2 மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றிருந்தனர். அந்த நேரம் வீட்டில் கங்காராமின் மனைவி லட்சுமி கங்காராம், குழந்தைகள் ராஜ், கோமல், குணால், மற்றும் கணேஷ் மகன் கோவிந்த் ஆகியோர் இருந்தனர். இதை அறிந்து நள்ளிரவில் வீ்ட்டிற்குள் புகுந்த கும்பல் 5 பேர் மீதும் பயங்கர ஆயுங்களை கொண்டு தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர்.
பெண் கைது
இது பற்றி தகவல் கிடைத்ததும் கே.ஆர்.எஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று விசாரித்தனர். விசாரணையில், வீடு புகுந்து 5 பேரை துடிக்க துடிக்க கொலை செய்ததும், மேலும் வீட்டில் இருந்த பணம் நகைகளையும் கொள்ளைப்போனதும் தெரியவந்தது. ஆனால் வழக்கமான கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இதனால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இதற்கிடையே மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் கங்காராமின் உறவினரான மைசூருவில் வசித்து வந்த லட்சுமி சுனில் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் கே.ஆர்.எஸ். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளத்தொடர்பு
இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
வியாபாரி கங்காராருடன் லட்சுமி சுனிலுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கங்காராம், லட்சுமி சுனிலை சந்திப்பதை நிறுத்திவிட்டார். மனைவி, குழந்தைகள்தான் முக்கியம் என்று கூறியுள்ளார். அத்துடன் கள்ளக்காதலை கைவிட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி சுனில், தனது கள்ளக்காதலுக்கு கங்காராமின் மனைவி மற்றும் குழந்தைகள் இடையூறாக இருப்பதாகவும், எனவே அவர்களை தீர்த்துக்கட்டவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி கொலை திட்டத்தை நிறைவேற்ற லட்சுமி சுனில் ஆயுதங்களை வாங்கியுள்ளார். பின்னர் அவர் கூலிப்படையை சேர்ந்த 2 பேருடன் கே.ஆர்.எஸ். கிராமத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் லட்சுமி சுனில் மட்டும் கங்காராமின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் கொலை செய்ய எடுத்து வந்த ஆயுதங்களை வீட்டின் கழிவறையில் பதுக்கிவைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கங்காராமின் மனைவி, பிள்ளைகள் தூங்கியுள்ளனர். இதையடுத்து லட்சுமி சுனில், கூலிப்படையை சேர்ந்த 2 பேரையும் வரவழைத்து, 5 பேரையும் ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
நாடகமாடினார்
பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 5 பேர் கொலையான தகவல் அறிந்ததும் லட்சுமி சுனில் கங்காராமின் வீட்டுக்கு சென்று அப்பாவி போல் உறவினர்களோடு உறவினர்களாக நின்று நாடகமாடியுள்ளார். ஆனால் முதலில் இந்த கொலை சம்பவத்தில் போலீசாருக்கு உடனடியாக துப்பு கிடைக்கவில்லை.
ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில், லட்சுமி சுனில் கொலை நடந்த இரவு கங்காராமின் வீட்டுக்கு வந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரித்த போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்நிலையில் நேற்று லட்சுமி கைதான தகவல் கிராம மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது லட்சுமியை தங்களிடம் ஒப்படைக்கும்படி போராட்டம் நடத்தினர். சட்டப்படி நீதிகிடைக்க கால தாமதம் ஏற்படும். எங்களிடம் ஒப்படைத்தால் உடனே அவருக்கு தண்டனை கொடுத்துவிடுவோம் என்று கோஷமிட்டனர்.
இதை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த வழக்கில் இன்னும் 2 பேர் தலைமறைவாகவுள்ளனர். அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story