‘மாணவர்களின் வன்முறை, காங்கிரசின் சதி’ - மந்திரி ஆர்.அசோக் குற்றச்சாட்டு


‘மாணவர்களின் வன்முறை, காங்கிரசின் சதி’ - மந்திரி ஆர்.அசோக் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Feb 2022 2:33 AM IST (Updated: 10 Feb 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் வன்முறை, காங்கிரசின் சதி என்று மந்திரி ஆர்.அசோக் குற்றம்சாட்டி உள்ளார்.

பெங்களூரு:

காங்கிரசின் சதி

  மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  மாணவர்களை தூண்டிவிடுவது காங்கிரசுக்கு நல்லதல்ல. அக்கட்சி தலைவர்கள் சில கருத்துகளை கூறி தூண்டிவிடுகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, காங்கிரசின் சதி இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு பிரிவினர் தீயை அணைக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் தீயை மேலும் பரவ செய்கிறார்கள். வகுப்பறையில் பர்தாவோ அல்லது காவி துண்டோ அனுமதிக்கப்படாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அரசு மதிக்கும். மற்றொரு புறம் சட்டத்தை யாரும் கையில் எடுத்து கொள்ளக்கூடாது.
  இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

ஐகோர்ட்டு தீர்ப்புக்காக...

  பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறுகையில், "ஹிஜாப் விவகாரத்தில் மாநிலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து மந்திரிகள் கூடி ஆலோசனை நடத்தினோம். ஐகோர்ட்டின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. அதனால் அதபற்றி நான் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. சீருடை குறித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

  கொரோனாவால் ஏற்கனவே 2 ஆண்டுகள் வீணாகிவிட்டன. தற்போது தான் கல்வி நிறுவனங்கள் செயல்படும் நிலை வந்துள்ளது. ஆனால் அதற்குள் இந்த விவகாரம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்" என்றார்.

கல்வி பாதிக்கப்பட்டது

  பெங்களூருவில் பி.யூ.கல்லூரியில் படித்து வரும் மாணவர் விகாஷ் கூறுகையில், "கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளால் எங்களது கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது தான் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதற்குள் இந்த விவகாரத்தால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேரடியாக வகுப்புகளுக்கு வந்து கற்பது, ஆன்லைன் கல்விக்கு ஈடாகாது" என்றார்.

Next Story