மோட்டார் சைக்கிள் திருடர்கள் 6 பேர் சிக்கினர்


மோட்டார் சைக்கிள் திருடர்கள் 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 10 Feb 2022 2:53 AM IST (Updated: 10 Feb 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடர்கள் 6 பேர் சிக்கினர்

மதுரை
மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
மதுரை நகரில் கடந்த சில நாட்களாக வீட்டின் முன்பு கடை மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன. அது தொடர்பாக மதுரை தெற்குவாசல், அவனியாபுரம், விளக்குத்தூண், எஸ்.எஸ்.காலனி, கரிமேடு, திலகர்திடல் போலீஸ் நிலையங்களில் அதிக புகார்கள் வந்தன. நேற்று மட்டும் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனவே நகரில் மோட்டார் சைக்கிள்களை திருடுபவர்களை உடனே கண்டு பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் மற்றும் போலீசார் திருப்பரங்குன்றம் வெள்ளக்கல் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றது..
6 பேர் கைது
உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்கள் 6 பேரையும் விரட்டி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். அதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த சூர்யா(வயது 19), சஞ்சீவ்காந்தி(19), திருச்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் மதுரையை சேர்ந்த 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கும்பல் நகரில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story