5 தலைமுறையாக வாழ்ந்த எங்களை அப்புறப்படுத்தி விட்டனர்: பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மாடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு-நாடோடிகளாக வாழ்வதாக வேதனை
5 தலைமுறையாக வாழ்ந்த எங்களை அப்புறப்படுத்தி விட்டனர். தற்போது நாடோடிகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்துக்கு மாடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
5 தலைமுறையாக வாழ்ந்த எங்களை அப்புறப்படுத்தி விட்டனர். தற்போது நாடோடிகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்துக்கு மாடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச பட்டா
சேலம் பனமரத்துப்பட்டி அருகே சூரியூர் வனப்பகுதியில் விவசாயிகள் பலர் வசித்து வந்தனர். அந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை கடந்த 2020-ம் ஆண்டு அங்கிருந்து வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகு அவர்கள் ஆங்காங்கே தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இருந்தாலும் பல ஆண்டுகளாக குடியிருந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்து வந்தனர். அவர்களது மனுக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
மாடுகளுடன் வந்தனர்
இதனால் வேதனை அடைந்த அந்த மக்கள், ஏற்கனவே தாங்கள் வசித்த இடத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு மாடுகளுடன் வந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை ஏற்காத மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
5 தலைமுறையாக...
அப்போது அவர்கள் கூறும் போது, சூரியூர் பகுதியில் 5 தலைமுறையாக வசித்து வந்தோம். நாங்கள் வசித்த இடம் அரசு நிலம் எனக்கூறி எங்களை அப்புறப்படுத்தி விட்டனர். இப்போது நாங்கள் வீடுகள் இல்லாமல் நாடோடிகளாக வாழ்கின்றோம். எனவே ஏற்கனவே நாங்கள் வசித்த பகுதியில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். பலமுறை முறையிட்டும் எங்களது கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாடுகளுடன் வந்துள்ளோம் என்றனர். உடனே போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். மக்களும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story