அரசியல் கட்சியினர் மீது 51 வழக்கு பதிவு: தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கூறினார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்று மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கூறினார்.
ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான சாருஸ்ரீ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குப்பதிவு எந்திரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு 2 கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 3-வது கட்டமாக வார்டு வாரியாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. வாக்குப்பதிவு மையங்களில் கழிப்பிட வசதிகள், அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் 9 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு வேட்பாளர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் வருவதற்கு தேவையான வசதிகள், வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்காக 2 அறைகள் அமைக்கப்படுகின்றன. மாவட்டத்தில் இதுவரை 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்தல் புறக்கணிப்பு என்று 3 இடங்களில் இருந்து புகார் வந்தது. அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் முன்வந்து யாரை தேர்வு செய்கிறார்களோ, அவர்கள் மூலம் தான் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கும். ஆகையால் மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
51 வழக்கு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 51 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முககவசம் அணியாமல் கொரோனா விதிகளை மீறியதாக 3 ஆயிரத்து 50 பேருக்கு மொத்தம் ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 750 வாக்குச்சாவடிகளில், 169 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடியாக அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கண்காணிப்பு கேமிரா மற்றும் வெப் கேமிரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட தேர்தல் பார்வையாளர் தலைமையில் வட்டார பார்வையாளர்கள் 25 பேர் நியமிக்கப்பட்டு தேர்தல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவுக்கு 3 ஆயிரத்து 500 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதே போன்று துணை தாசில்தார் அளவிலான அதிகாரிகள் தலைமையில் மண்டல குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் வாக்குப்பதிவு எந்திரத்தை வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று ஒப்படைப்பது, வாக்குப்பதிவு முடிந்த பிறகு மீண்டும் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தை வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொண்டு ஒப்படைக்கும் பணியை மேற்கொள்வார்கள்.
மேலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்கள் பட்டியல் பொருத்தும் பணிகள் நாளை (அதாவது இன்று) முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதற்காக பெல் நிறுவன என்ஜினீயர்கள் 5 பேர் வந்து உள்ளனர். கூடுதலாக 5 பேரை கேட்டு உள்ளோம். அவர்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story