வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி
விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விழுப்புரம்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சிகள் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 31-ந் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. அந்த வகையில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சி பகுதிகளிலும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சி பகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மின்னணு எந்திரங்களை பயன்படுத்துவது
விழுப்புரம் நகராட்சி தேர்தல் 129 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 155 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 155 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்-1, 155 வாக்குச்சாவடி நிலை அலுவலர்-3 என மொத்தம் 465 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் கட்டுப்பாட்டு எந்திரத்தை எவ்வாறு பொருத்துவது, இந்த எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் எவ்வாறு உடனடியாக சரிசெய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் அளித்தனர். இப்பயிற்சியை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரியாகவும், முறையாகவும் பயன்படுத்தி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் பணிபுரிய வேண்டும் என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
Related Tags :
Next Story