கொடைக்கானலில் இரும்பு கேட்டில் சிக்கிய காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை
கொடைக்கானலில் இரும்பு கேட்டில் சிக்கிய காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளன. இவை அடிக்கடி நகர் பகுதிக்குள் உலா வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பர்ன்ஹில் ரோடு பகுதியில் உள்ள தனியார் வளாகத்திற்குள் ஒரு காட்டெருமை இரும்பு கேட்டின் வழியாக புகுந்தது. அப்போது அதன் பின்னங்கால் கேட்டில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து துடிதுடித்த அந்த காட்டெருமை கேட்டில் இருந்து கால்களை எடுக்க இரவு முதல் நேற்று காலை வரை நீண்டநேரம் போராடியது. இதில் அதன் கால் முறிந்தது.
இதைத்தொடர்ந்து அந்த காட்டெருமை கேட்டில் சிக்கிய காலை அதுவாகவே எடுத்துக்கொண்டு சுமார் 200 மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் இருந்த வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது. பின்னர் அந்த காட்டெருமை வெளியே வரமுடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் கால்நடை டாக்டர் உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். பின்னர் வனத்துறையினர் கழிவறையை உடைத்து காட்டெருமையை கிரேன் மூலம் மீட்டு குண்டன்சோலை காப்புக்காடு பகுதியில் விட்டனர்.
கால் முறிந்து பலத்த காயம் அடைந்ததால் காட்டெருமையால் நடக்க முடியவில்லை. இதனால் வனத்துறையினர் அந்த காட்டெருமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கொடைக்கானல் நகர் பகுதிக்குள் காட்டெருமைகள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story