ஓட்டுக்கு பணம் வேண்டாம், ரோட்டுக்கு தரம் வேண்டும் திண்டுக்கல்லில் வேட்பாளர்களுக்கு, பொதுமக்கள் நூதன அறிவுரை


ஓட்டுக்கு பணம் வேண்டாம், ரோட்டுக்கு தரம் வேண்டும் திண்டுக்கல்லில் வேட்பாளர்களுக்கு, பொதுமக்கள் நூதன அறிவுரை
x
தினத்தந்தி 10 Feb 2022 8:56 PM IST (Updated: 10 Feb 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டுக்கு பணம் வேண்டாம், ரோட்டுக்கு தரம் வேண்டும் என்று திண்டுக்கல்லில் வேட்பாளர்களுக்கு, பொதுமக்கள் நூதனமுறையில் அறிவுரை கூறினர்.

திண்டுக்கல்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பணி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்று கண்காணிக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க 30 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 4 குழுக்களும், பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகளுக்கு தலா ஒரு குழு மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தலா ஒரு குழு என்ற அடிப்படையில் மொத்தம் 30 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் பாரதிபுரம் தபால் அலுவலக சாலை 2-வது குறுக்கு தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் ‘ஓட்டுக்கு பணம் வேண்டாம், ரோட்டுக்கு தரம், ஓடையில் சுகாதாரம் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வாசகங்கள் மூலம் தங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஓட்டுக்கு பணம் தர வேண்டாம். அதற்கு பதிலாக தரமான சாலை, ஓடையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தி சுகாதாரமாக மாற்ற வேண்டும் என்று நூதன முறையில் அறிவுரை கூறியுள்ளனர். இது தேர்தல் அதிகாரிகளை வியப்படைய செய்துள்ளது.

Next Story