கர்ப்பிணி உயிரோடு எரிப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


கர்ப்பிணி உயிரோடு எரிப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Feb 2022 9:27 PM IST (Updated: 10 Feb 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

உயிரோடு எரிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய மாமியாரை போலீசார் கைது செய்தனர்

சிவகாசி, 
உயிரோடு எரிக்கப்பட்ட கர்ப்பிணிக்்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
5 மாதங்களுக்கு முன்பு திருமணம்
விருதுநகர் அருகே வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர், கார்த்தீசுவரி (வயது 20). இவருக்கும், சிவகாசி எஸ்.என்.புரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சுக்கிரவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜோதிமணி வேலை பார்த்து வருகிறார். இவருடைய தாய் சின்னத்தாய் (45). இவர் எம்.புதுப்பட்டியில் தூய்மை பணியாளராக வேலை செய்தார்.
ஜோதிமணி ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்தவர். இந்த நிலையில்தான் கார்த்தீசுவரிக்கும், அவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் சென்று விடக்கூடாது என்று ஜோதிமணியின் தாய் கூறி வந்துள்ளார். 
தாய், மகன் இருவரும் வேலைக்கு செல்லும் போது வீட்டில் கார்த்தீசுவரியை பூட்டி வைத்துவிட்டு சென்றனராம். இது குறித்து கார்த்தீசுவரி தனது சகோதரி மாரீசுவரியிடம் போனில் கூறி இருக்கிறார்.
கர்ப்பம்
மேலும் கார்த்தீசுவரி தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவரை சில நாட்களுக்கு முன்னர் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பின்னர் ஒரு வாரம் கழித்து கணவனுடன் சிவகாசிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின்பு கார்த்தீசுவரி அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று திரும்பிய போது மாமியார் சின்னத்தாய் தரக்குறைவாக பேசி, கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகள் வயிற்றில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக கார்த்தீசுவரி, தனது சகோதரி மாரீசுவரிக்கு மீண்டும் போன் செய்து கூறி உள்ளார். அப்போது 2 நாட்களில் வந்து அழைத்து வருவதாக அவர் ஆறுதல் கூறியுள்ளார்.
பலத்த தீக்காயம்
இதற்கிடையில் கடந்த 5-ந்தேதி மாரீசுவரியின் கணவர் குருசாமிக்கு போன் செய்த கார்த்தீசுவரி, மாமியாரும், கணவனும் தன்னை அடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாரீசுவரி மற்றும் அவரது தாய் ஆகியோர் எஸ்.என்.புரத்துக்கு சென்ற போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பலத்த தீக்காயத்துடன் கார்த்தீசுவரியை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். பின்னர் கார்த்தீசுவரி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கர்ப்பிணியான கார்த்தீசுவரி சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 95 சதவீத தீக்காயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாமியார் கைது
இதை தொடர்ந்து மாரீசுவரி கொடுத்த புகாரில், தனது தங்கை கார்த்தீசுவரியை அவருடைய மாமியார் சின்னத்தாய் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறி உள்ளார். 
மேலும் சிவகாசி மாஜிஸ்திரேட்டிடம் கார்த்தீசுவரி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய மாமியார் சின்னத்தாயை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story