அரசு அனுமதி மீறல்: ஏரியில் மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே அரசு அனுமதியை மீறி ஏரியில் மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை ஊராட்சியில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள சுமார் 2500 ஏக்கர் நிலம் பாசனம் பெற்றுவருகிறது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக, ஏரியில் இருந்து மண்அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான மண்ணை தோண்டி லாரிகளில் அள்ளி சென்றனர். இதனால் அங்கு சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
லாரிகள் சிறைபிடிப்பு
விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவது பற்றி அறிந்த, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் ஏரிக்கு விரைந்து சென்று, அங்கு மண் அள்ளிக்கொண்டு இருந்த லாரிகளை தடுத்து சிறைபிடித்தனர்.
இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் தனபதி, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வாக்குவாதம்
அப்போது அளவுக்கு அதிகமாக தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் மண் எடுப்பதாகவும், அதிக ஆழத்தில் மண் எடுப்பதால், கால்நடைகள், சிறுவர், சிறுமிகள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து இனி மண் எடுக்க விடமாட்டோம் என்று கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை அழைத்து, ஏரியின் மைய பகுதியில் மண் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட அளவில் தான் எடுக்க வேண்டும், லாரிகள் வேகமாக செல்லக்கூடாது என்று தாசில்தார் தனபதி கூறினார்.
மேலும் இனி கூடுதலாக மண் எடுக்காமல் கண்காணிப்பதாகவும் போராட்டக்காரர்களிடம் தாசில்தார் உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சமபவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story