தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
மாணவர்கள் தவிப்பு
நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி அருகே உள்ள சிங்கம்பட்டி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளனர். இவர்கள் வெளியூர்களில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். அதேபோல் வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு செல்வோரும் உள்ளனர். ஆனால் இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி செய்து தரவேண்டும். -மணிகண்டன், சிலுக்குவார்பட்டி.
கிணற்றின் சுவர் சேதம்
திண்டுக்கல் ஒன்றியம் சிறுமலை ஊராட்சி வேளாண் பண்ணை கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் கிணற்றின் சுவர் சேதம் அடைந்து இடிந்து விட்டது. இதனால் தண்ணீர் எடுப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே கிணற்றின் சுவரை மீண்டும் கட்டித்தர வேண்டும்.- பழனிசாமி, சிறுமலை.
புதர் மண்டிய குடிநீர் தொட்டி
சின்னமனூர் நகராட்சி மின்நகரில் குடிநீர் தொட்டி அமைந்து உள்ள பகுதி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் அவை வீட்டுக்கு உள்ளேயும் புகுந்து விடுகின்றன. எனவே புதர்களை அகற்ற வேண்டும். -சிவாஜி, சின்னமனூர்.
வேகத்தடைகளால் விபத்து
சித்தையன்கோட்டை பேரூராட்சி அழகர்நாயக்கன்பட்டியில் சாலை விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அந்த வேகத்தடைகளில் வெள்ளைநிற குறியீடு எதுவும் இல்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வேகத்தடையை கவனிக்காமல் சென்று விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதை தடுக்க வேகத்தடைகளில் வெள்ளைநிற குறியீடு வரைய வேண்டும். நாகராஜ், சித்தையன்கோட்டை.
குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
திண்டுக்கல்லை அடுத்த பெரியபள்ளப்பட்டியில் உள்ள பிஸ்மிநகரில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்பாஸ்அலி, பிஸ்மிநகர்.
Related Tags :
Next Story