பண்ருட்டி நகராட்சியை கைப்பற்றப்போவது யார்?


பண்ருட்டி நகராட்சியை கைப்பற்றப்போவது யார்?
x
தினத்தந்தி 10 Feb 2022 10:17 PM IST (Updated: 10 Feb 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி நகராட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பது பற்றி இதில் பாா்போம்.


பண்ருட்டி நகராட்சி 1886-ம் ஆண்டு வரை பஞ்சாயத்தாக இருந்தது. அதன் பிறகு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து பண்ருட்டி பேரூராட்சி, திருவதிகை ஊராட்சி பகுதிகள் மற்றும் ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாப்பாளையம், வட கைலாசம், வி.ஆண்டிக்குப்பம், விழமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 1.10.1966 அன்று மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது.

தரம் உயர்வு

பின்னர் நகராட்சியின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு 1.4.1975 அன்று இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து வருவாய் மற்றும் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கடந்த 6.10.1989 அன்று பண்ருட்டி முதல் நிலை நகராட்சியாக உதயமாகி, செயல்பட்டு வருகிறது.

இந்நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29 ஆயிரத்து 950 ஆண்களும், 30 ஆயிரத்து 150 பெண்களும் என மொத்தம் 60 ஆயிரத்து 100 பேர் வசிக்கின்றனர்.

தேர்தல்

பண்ருட்டி நகராட்சியின் முதல் நகர சபை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.மணி 1969 முதல் 1976 வரை 7 ஆண்டுகள் பதவி வகித்தார். இதையடுத்து 10 ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. 

பின்னர் மீண்டும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மணி, வெற்றி பெற்று 2-வது முறையாக 1986 முதல் 1991 வரை தலைவராக இருந்தார். தொடர்ந்து 1991-ம் ஆண்டு முதல் 5 வருடம் தேர்தல் நடைபெறவில்லை. 

3-வது நகரமன்ற தலைவராக தி.மு.க. கூட்டணியை சேர்ந்த த.மா.கா. வேட்பாளர் பஞ்சவர்ணம் 1996 முதல் 2001 வரை பதவி வகித்தார். இவரே 4-வது நகரமன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார்.

 இவருக்கு பிறகு பண்ருட்டி நகரசபை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பச்சையப்பன் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை நகரசபை தலைவர் பதவியில் இருந்தார்.இந்த நிலையில் 2011-ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த பன்னீர்செல்வம் வெற்றி பெற்று, பண்ருட்டி நகரசபை தலைவர் பதவியை கைப்பற்றினார்.

மாற்று இடம்

பண்ருட்டி நகராட்சி பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. அதாவது பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் குப்பைகள் கொட்டுவதை உடனடியாக தடுத்து, மாற்று இடத்தைத் தேர்வு செய்து அங்கு குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் இருந்து கொக்குபாளையம் வரையிலான புறவழிச்சாலை திட்டம், கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கடலூர் ரோட்டில் உள்ள 4 முனை சந்திப்பில் இருந்து அண்ணாகிராமம் யூனியன் அலுவலகம் வரை சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். பண்ருட்டி கும்பகோணம் சாலையில் லிங்க் ரோடு அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.

 பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, பழைய சேதமடைந்த குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைக்க வேண்டும். பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் இருந்து மணிநகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் வரை நில எடுப்பு செய்து, அகலமான சாலை அமைத்து தர வேண்டும் என்பது போன்றவை இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

தீவிர பிரசாரம்

இதற்கிடையே கடந்த மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பண்ருட்டி நகராட்சியில் 24 ஆயிரத்து 517 ஆண் வாக்காளர்களும், 25 ஆயிரத்து 946 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 9 பேரும் என மொத்தம் 50 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ளனர். பண்ருட்டி நகராட்சி 33 வார்டுகளை கொண்டதாகும். 

தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 33 பதவிகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., சுயேச்சை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பண்ருட்டி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Next Story