பா.ஜனதா பிரமுகரின் காருக்கு தீ வைப்பு


பா.ஜனதா பிரமுகரின் காருக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 10:20 PM IST (Updated: 10 Feb 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே பா.ஜனதா பிரமுகரின் காருக்கு தீ வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி:-

கீழையூர் அருகே பா.ஜனதா பிரமுகரின் காருக்கு தீ வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பா.ஜனதா பிரமுகர்

நாகை மாவட்டம் கீழையூர் அருகே திருப்பூண்டி-தலைஞாயிறு சாலை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வர்ராம்(வயது 28). இவர், பா.ஜனதா இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவருடைய வீட்டுக்கு முன்பு தகர கொட்டகையின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் இடது பக்க கதவு மற்றும் இடது பக்க டயர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது. 
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வீட்டுக்குள் இருந்த புவனேஸ்வர்ராம் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் உடனடியாக தண்ணீர் ஊற்றி கார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். 

மர்ம நபர்கள் தீ வைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கீழையூர் போலீசார் அங்கு சென்று தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் மூலமாகவும் துப்பு துலக்கப்பட்டது. காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 
இதுகுறித்து கீழையூர் போலீசில் புவனேஸ்வர்ராம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காருக்கு தீ வைத்தவர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தனிப்படை விசாரணை

பா.ஜனதா மாநில செயலாளர் வரதராஜன், நாகை மாவட்ட தலைவர் நேதாஜி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா பிரமுகர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story