ரேஷன் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
கரூர்
கலெக்டர் ஆய்வு
கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள உணவுப்பெருட்களின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுவினியோக திட்டத்தின் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்குகளில் ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டு, அங்கிருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் தரம் குறித்து உணவுக்கிடங்கின் தரபரிசோதகர் முறையாக ஆய்வு செய்து, அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் உணவுப்பொருட்கள் இருந்தால் மட்டுமே அவற்றை கிடங்குகளில் வைக்க அனுமதிக்க வேண்டும்.
பதிவேடுகள்
அவ்வாறு வைக்கப்படும் உணவுப்பொருட்கள் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முறையாக எடைபோட்டு, சாக்குகளில் வைத்து தைத்து அனுப்பப்படுகின்றது. இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் உள்ள உணவுப்பொருட்களின் தரம் முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து திடீர் ஆய்வு செய்த கலெக்டர், ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்காக பொருட்கள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த லாரியில் இருந்து, மூட்டைகளை இறக்கி எடைபோட்டு பார்த்து அதில் உள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும், உணவுப்பொருட்கள் கிடங்கிற்கு வரப்பெற்ற நாள், அவற்றை தரப்பரிசோதனை செய்த நாள், ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட நாள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பதிவேடுகளை பார்வையிட்டும், அரிசியினை எந்திரத்தில் வைத்து தரம் பிரிக்கும் முறையினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
லாரியில் இருந்து இறக்கி...
மேலும், கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி, கோதுமை, பருப்பு மூட்டைகளில் குறிப்பிட்ட சில மூட்டைகளை கீழே இறக்க சொல்லி, அவைகளில் இருந்த பொருட்களின் தரம் குறித்து பரிசோதனை செய்தார். அதேபோல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கரூர் கிடங்கில் இருந்து தாந்தோன்றிமலை ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்படுவதையும், உணவுப்பொருள் மூட்டைகளை எடைபோடச்சொல்லி சரியான அளவில் உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் கழக மண்டல மேலாளருக்கும், கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story