நாமக்கல்லில் ரூ.4¼ லட்சம் மோசடி: போலி பெண் வருவாய் ஆய்வாளர் சிக்கினார்-உடந்தையாக இருந்த கணவரும் கைது
நாமக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக 7 பேரிடம் ரூ.4¼ லட்சம் மோசடி செய்த போலி பெண் வருவாய் ஆய்வாளர் போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நாமக்கல்:
ரூ.4¼ லட்சம் மோசடி
நாமக்கல் நல்லிபாளையம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பன்னீர்செல்வம் (வயது 36). இவர் நேற்று நல்லிபாளையம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருச்செங்கோடு அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த மகரஜோதி (29) என்பவர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் போல அடையாள அட்டை அணிந்து சுற்றி திரிந்தார்.
அவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரிடம் மாவட்ட கலெக்டரின் கையெழுத்து போட்டது போன்ற பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து கொடுத்து இருப்பதாகவும், முனியப்பன் உள்பட 7 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
கணவன்-மனைவி கைது
அதன்பேரில் நேற்று நல்லிபாளையம் போலீசார் மகரஜோதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய கணவர் சங்கர் (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையே மகரஜோதிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்கரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட போலி பெண் வருவாய் அலுவலர் கணவருடன் சிக்கி உள்ள சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story