வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு
கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை கலெக்டர் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பை கலெக்டர் பார்வையிட்டார்.
பயிற்சி
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை-1, நிலை -2, நிலை-3 அலுவலர்கள் ஆகிய அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது.
அதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
செயல்முறை விளக்கம்
கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி, ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளில் 422 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய கூடிய 2 ஆயிரத்து 48 அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
பயிற்சியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல்முறை விளக்கம் மற்றும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் செயல்பாடு குறித்தும், படிவங்கள் நிரப்புவது குறித்தும், பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் வாக்குசாவடி அலுவலர்களிடமிருந்து தபால் வாக்குகளுக்கான படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு அஞ்சல் வாக்குகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
எனவே, தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சியை பெற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகர் அமைப்பு அலுவலர் சாந்தி, தாசில்தார் சரவணன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story