கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு
மீன்பிடி ெதாழில் செழிக்க கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கீழக்கரை,
மீன்பிடி ெதாழில் செழிக்க கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பொங்கலிட்டு வழிபாடு
ஏர்வாடி தர்கா அருகே உள்ள சடைமுனியன் வலசையில் கிராம மக்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடி தொழில் அமோகமாக நடைபெறுவதற்கு கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கல் வழிபாடு நடத்துவது வழக்கம். கடலை ஒரு தாயாக பாவித்து அதை கடல் மக்கத்து அம்மாளாக வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி சடைமுனியன் வலசை கிராமத்து மக்கள் அனைவரும் கடல் அருகே திரண்டனர். அங்கு கடல் அருகே கொடிமரத்தில் கிராம தலைவர் மலைராஜ் பச்சைக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்று சொல்லி ெகாண்டு முர்சல் ஆலீம், அபுல் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதையொட்டி மவுலிது ஓதப்பட்டு கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கலிட்டு நெய்சோறு படைக்கப்பட்டது. பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மீன்பிடி ெதாழில் சிறப்பாக இருக்கும்
இதில் கிராம தலைவர் மலைராஜ் கூறியதாவது:-
எங்களது முன்னோர்கள் காலங்காலமாக கடல் மக்கத்து அம்மாளுக்கு ஆண்டுதோறும் பொங்கலிட்டு நெய் சோறு வழங்கி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுகூடி கடல் அருகே கொடிமரத்தில் கொடி ஏற்றி வழிபட்டனர். இதனால் மீன்பிடி தொழில் மிக அமோகமாக இருந்ததாக முன்னோர்கள் தெரிவித்தனர். கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதை யாரும் பின்பற்றவில்லை. இதனால் மீன்பிடி தொழில் எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் ஆண்டுதோறும் இது போன்ற சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டு தற்போது கடல் மக்கத்து அம்மாளுக்கு பொங்கல் வழிபாடு செய்து உள்ளோம். இந்த வழிபாட்டால் நாங்கள் மனநிறைவு பெறுகிறோம் என்றார்.
இதில் மன்னார்வளைகுடா மண்டல அலுவலர் லோகநாதன் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story