ஜல்லிக்கட்டில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்களுக்கே அனுமதி


ஜல்லிக்கட்டில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்களுக்கே அனுமதி
x
தினத்தந்தி 11 Feb 2022 1:01 AM IST (Updated: 11 Feb 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் கூறினார்.

புதுக்கோட்டை, 
கலந்தாய்வு கூட்டம்
ஜல்லிக்கட்டுகளை அரசு வகுத்துள்ள நெறிமுறைகள் அடிப்படையில் நடத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் பேசும்போது கூறியதாவது:-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டினை மீட்டெடுத்து, தொடர்ந்து நடைபெறும் வகையில் ஜல்லிக்கட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுகள் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பூசி
ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் முழு உடல் தகுதி பெற்றுள்ளனவா? என்பது குறித்தும், அவைகளுக்கு எவ்வித போதைப்பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதனை கால்நடை பராமரிப்பு துறையினர் மூலமாக உறுதி செய்ய வேண்டும். மேலும் வீரர்கள் அனைவரும் அரசு தெரிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
போட்டியை கண்டுகளிக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் இரண்டு அடுக்கு இரும்பு தடுப்புகளை அமைக்கவும், போட்டி நடைபெறும் இடத்தில் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயங்கள் ஏற்படாத வகையில் தேங்காய் நார் உள்ளிட்டவைகளை கொண்டு நிரப்பிட வேண்டும். வாடிவாசலிலிருந்து வெளிவரும் காளைகளுக்கு பாதுகாப்பான முறையில் வாசல்களை அமைக்கவும், வெளியேறும் காளைகளுக்கு போதுமான அளவில் உணவுப்பொருட்கள் மற்றும் நீர் இருப்பினை உறுதி செய்ய வேண்டும்.
கண்காணிப்பு கேமரா
ஜல்லிகட்டில் பாதிப்பு ஏற்படும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் போதுமான அளவில் மருத்துவ குழுவினர் இருப்பதை உறுதி செய்யவும், நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் சட்டம்-ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் போலீசார் மூலமாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் அபிநயா, தண்டாயுதபாணி, சொர்ணராஜ், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சம்பத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் கலந்துகொண்டனர்.

Next Story