நாகர்கோவில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட பெற்றோர் எதிர்ப்பு மாணவர்களின் மாற்று சான்றிதழை கேட்டதால் பரபரப்பு


நாகர்கோவில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட பெற்றோர் எதிர்ப்பு மாணவர்களின் மாற்று சான்றிதழை கேட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Feb 2022 1:21 AM IST (Updated: 11 Feb 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அரசு எஸ்.எல்.பி. பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் மாற்று சான்றிதழை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 
நாகர்கோவில் அரசு எஸ்.எல்.பி. பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவர்களின் மாற்று சான்றிதழை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளி
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பொதுப்பணித்துறை சாலையில் அரசு எஸ்.எல்.பி. உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்டோர் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சிறுவர் சீர்திருத்த பள்ளி அங்கு வருவதாக கூறப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளி வளாகத்தில் திரண்டனர். புதிய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  பள்ளியில் சீர்திருந்த பள்ளி வருவதால் இங்கு பயிலும் மாணவர்களின் ஒழுக்கம் சீர்குலைந்து தடம் மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். கட்டிடம் கட்டுவதால் மாணவர்களுக்கு போதிய வழிப்பாதை இருக்காது, விளையாடவும் மைதானம் இல்லை என குற்றம் சாட்டினர். இவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி நிர்வாகி மிசா சோமன், நம்பி ராஜன், சங்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டக்காரர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது சீர்திருத்த பள்ளி வரவில்லை எனவும், அங்கு காப்பகம் வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் கட்டிடம் வருவதால் வழிப்பாதை வசதி பாதிக்கும், விளையாட மைதானமும் இருக்காது என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே கட்டுமான பணிகளை நிறுத்தும்படியும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். 
மாற்று சான்று கேட்டதால் பரபரப்பு
இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள், எங்களுடைய குழந்தைகளை இந்த பள்ளியில் படிக்க வைக்க விரும்பவில்லை எனவும், மாற்று சான்றிதழை வழங்கும்படி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளும் மாற்று சான்று கொடுக்க மறுத்தனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளிப்பதாக கூறி அங்கிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story