அரசியல் சாசனம்-ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது - சித்தராமையா பேச்சு
அரசியல் சாசனம்-ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:
அரசியல் சாசனம்
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவராக முகமது நலபட் நியமனம் செய்யப்பட்டார். அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு, பெண்கள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையின மக்கள் கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சட்ட நடவடிக்கை
மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு எதையும் செய்யவில்லை. சாதி-மதம் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களை சொல்லி மக்களை திசை திருப்புகிறார்கள். கர்நாடகத்திலும் வளர்ச்சி பணிகள் நின்றுவிட்டன. அதனால் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் ஹிஜாப் விவகாரத்தை பா.ஜனதா சர்ச்சையாக மாற்றியுள்ளது.
பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காவி துண்டு போட்டிருந்ததை நான் எங்கும் பார்த்தது இல்லை. ஆனால் சங்பரிவார் அமைப்புகள் காவி துண்டுகளை வாங்கி மாணவர்களுக்கு வழங்கி அதை போட்டு செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். இத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சீருடை என்ற பெயரில் மாணவர்கள் மத்தியில் பகை உணர்வை விதைத்து அவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்த இந்த அரசு முயற்சி செய்கிறது.
தயாராக வேண்டும்
செங்கோட்டையில் தேசிய கொடி இருக்கும் இடத்தில் காவி கொடியை பறக்க விடுவோம் என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார். அவர் பொது வாழ்க்கையில் இருக்க தகுதியற்றவர். நாட்டின் மீது அவருக்கு கவுரவம் உள்ளதா?. மோடியை போல் பொய் பேசும் பிரதமரை நான் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. நாட்டில் வேலையின்மை தாண்டவமாடுகிறது. நாட்டின் கடன் சுமை ரூ.135 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இளைஞர்கள் போராட்டத்திற்கு தயாராக வேண்டும். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. பா.ஜனதாவிடம் இருந்து கர்நாடகத்தை காப்பாற்ற வேண்டும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்பதில் இளைஞர் காங்கிரசின் பங்கு அதிகம். பா.ஜனதாவுக்கு எந்த திட்டத்தையும் அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் வரும்போது உணர்வு பூர்வமான விஷயங்களை முன்வைத்து வாக்கு கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ஊழல் மிதமிஞ்சி போய்பவிட்டது. இந்த ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் பெறுகிறார்கள்.
இவ்வாறு சிததராமையா பேசினார்.
Related Tags :
Next Story