மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிய தடை - கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு


மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிய தடை - கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு
x
தினத்தந்தி 11 Feb 2022 2:33 AM IST (Updated: 11 Feb 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிந்து வர அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:
  
‘ஹிஜாப்’ அணியும் விவகாரம்

  கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பிரச்சினை உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் தான் முதலில் எழுந்தது. அங்கு படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு தடை விதித்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். இந்த தடையை மீறி அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரியின் நுழைவு வாயிலிலேயே முதல்வர் தடுத்து நிறுத்தினார்.

  இதை கண்டித்து அந்த மாணவிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு போட்டு வந்தனர். அதனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது.

வன்முறை வெடித்தது

  இது தொடர்பாக சிவமொக்கா, தாவணகெரே மாவட்டம் ஹரிகரா, பாகல்கோட்டை ஆகிய பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது.

  இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். மேலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தடுக்க மாநிலம் முழுவதும் வெடித்ததால் பள்ளி-கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளை சுற்றி போராட்டம் நடத்தவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை

  இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள் 18 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளனர். இந்த மனு மீது கடந்த 8-ந் தேதி ஐகோர்ட்டில் தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. முதல் நாளில் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டார். 2-வது நாளான நேற்று முன்தினம் கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி ஆஜராகி வாதிட இருந்தார்.

  ஆனால் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி தனி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் நேற்று முதலே விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
  அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று ஹிஜாப் விவகார வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.

  முதலில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களின் வாதங்களை எடுத்து வைத்தனர். வக்கீல் தேவதத் காமத் வாதிடும்போது கூறியதாவது:-

அரசியல் சாசன உரிமை

  முஸ்லிம் மாணவிகள் பல ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த 3-ந் தேதி முதல் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது. அரசு பிறப்பித்துள்ள சீருடை தொடர்பான உத்தரவு அர்த்தமற்றதாக உள்ளது. அந்த உத்தரவில், ஹிஜாப் அணிவது அரசியல் சாசன உரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்து சில ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளன. தனிநபர் சுதந்திரத்திற்கும், பள்ளிக்கூட சுதந்திரத்திற்கும் போட்டி இருந்தது.

  கேரள ஐகோர்ட்டு, ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் ஒரு பாகம் என்று கூறியுள்ளது. ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பு மாணவிகளை பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. அரசுகள் மத சுதந்திரத்தை ஒரு சில நேரத்தில் மட்டும் கட்டுப்படுத்தலாம். அதனால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி-கல்லூரிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது அவரவர்களின் கலாசாரம். ஹிஜாப் அணிவதால் பிறருக்கு எந்த இடையூறும் ஏற்படுவது இல்லை. சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பாடம் கற்க அனுமதி அளிக்க வேண்டும்.
  இவ்வாறு தேவதத் காமத் வாதிட்டார்.

தாராள மனப்பான்மை

  இதைதொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் ஆஜரான இன்னொரு வக்கீல் சஞ்சய் ஹெக்டே வாதிடுகையில் கூறியதாவது:-

  தனிநபர் சுதந்திரத்தில், தான் விரும்பியபடி ஆடை அணியும் சுதந்திரமும் அடங்கியுள்ளது. சீருடை அணியாவிட்டால் அதற்காக அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடக கல்வி சட்டத்தில் சொல்லப்படவில்லை. பொதுவாக பள்ளிகளில் சீருடை என்பது இருக்கவில்லை. சீருடை பயன்படுத்துவது தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியது. அதன்பிறகு 1995-ம் ஆண்டு கர்நாடக அரசு சீருடை அணிவதற்கான விதிமுறைகளை வெளியிட்டது. சீருடையை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

  விரும்பிய இடத்தில் சீருடையை தைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சீருடை அணிவது தொடர்பாக சட்டத்தில் சில அம்சங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் பி.யூ.கல்லூரிகளில் சீருடை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. நல்ல இதயத்துடன் கூடிய தாராள மனப்பான்மை இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது. அதனால் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி-கல்லூரிக்கு வர அனுமதி அளிக்க வேண்டும். இதுகுறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
  இவ்வாறு சஞ்சய் ஹெக்டே வாதிட்டார்.

சீக்கியர்கள் தலைப்பாகை

  மற்றொரு வக்கீல் காலீஸ்வரம் ராஜூ வாதாடுகையில். "நிலைமையை கருத்தில் கொண்டு மாநில அரசு, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி-கல்லூரிக்கு வர அனுமதி அளிக்க வேண்டும். சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

   அதேபோல் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்க வேண்டும். இதுகுறித்து கர்நாடக அரசுக்கு இந்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார்.

அட்வகேட் ஜெனரல் வாதம்

  அதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி வாதிடுகையில், "முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகிறார்கள். அதே போல் சில மாணவர்கள் காவி துண்டு போட்டு வருகிறார்கள். இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை (இன்று) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி-கல்லூரிகளை திறக்க தயாராக உள்ளது. ஆனால் சிலர் ஹிஜாப் அணியவும், இன்னும் சில மாணவர்கள் காவி துண்டு போட்டு வரவும் அனுமதி கேட்கிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் பள்ளி-கல்லூரிகளை திறப்பது கடினம். பள்ளி-கல்லூரி வளர்ச்சி குழுக்கள் முடிவு செய்யும் சீருடையை மாணவ-மாணவிகள் அணிந்து வர வேண்டும். இந்த சம்பவங்களுக்கு தொடர்பே இல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் கல்வி கற்றல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.

மத அடையாள ஆடைக்கு தடை

  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வாய்மொழியாக இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.
  அதில் கூறியிருப்பதாவது:-

   "இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத அடையாளங்களை குறிக்கும் ஆடைகளை அணிய தடை விதிக்கிறோம். மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பள்ளி-கல்லூரிகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும்.

   இந்த விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் மதியம் 2.30 மணிக்கு விசாரணை தொடங்கப்படும். தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தி சில நாட்களில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும். அணிய உகந்ததாக இல்லாத ஆடைகளை அணிவது குறித்து நீங்கள் (மனுதாரர்கள் வக்கீல்) எங்களுக்கு அறிவுறுத்தக்கூடாது".
  இவ்வாறு அதில் அவர்கள் கூறினர்.

கல்வி உரிமையை பாதிக்கிறது

  இந்த இடைக்கால உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் வக்கீல் தேவதத் காமத், "உங்களின் இந்த இடைக்கால உத்தரவு, மாணவிகளின் கல்வி உரிமை பாதிப்பதாக உள்ளது" என்றார்.

  அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, "அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வழங்குகிறோம். அதுவரை நீங்கள் இந்த கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தனி நீதிபதி விசாரணை நடத்தும்போது, இதில் அரசியல் சாசன அம்சங்கள் அடங்கி இருப்பதாக கூறியுள்ளார்" என்றார்.

பத்திரிகையாளர்களுக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள்

ஹிஜாப் அணிவது தொடர்பான விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிட்டனர். அப்போது தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி அவ்வப்போது குறுக்கிட்டு சில விளக்கங்களை கேட்டார். அதற்கு அந்த வக்கீல்கள் பதிலளித்தனர். அந்த நேரத்தில் தலைமை நீதிபதி, ‘பத்திரிகையாளர்களை பார்த்து நாங்கள் கேட்கும் இந்த கருத்துகளை குறித்து நீங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.

Next Story