சென்னை விமான நிலையத்தில் 2¾ கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 2¾ கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Feb 2022 5:59 AM IST (Updated: 11 Feb 2022 5:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 766 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஜமீம் கமால் (வயது 35) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த உள்ளாடைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 530 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த சையத் அபுதாகீர் (38) என்பவரும் உள்ளாடையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 236 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 766 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story