வெலிங்டன் ராணுவ வீரர்களுக்கு பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பாராட்டு


வெலிங்டன் ராணுவ வீரர்களுக்கு பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பாராட்டு
x
தினத்தந்தி 11 Feb 2022 7:38 PM IST (Updated: 11 Feb 2022 7:38 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்ட வெலிங்டன் ராணுவ வீரர்களை பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பாராட்டி உள்ளார்.

ஊட்டி

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்ட வெலிங்டன் ராணுவ வீரர்களை பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் பாராட்டி உள்ளார்.

போர் நினைவு சின்னம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கப்பத்தொரை கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ராமகிருஷ்ணன், கடந்த 11.2.2001 அன்று இந்திய-சீன எல்லையில் கிலேசியர் என்ற இடத்தில் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்தார். இதனை நினைவுகூரும் வகையில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கப்பத்தொரை கிராமத்தில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. 

ராணுவ வீரர் இறந்து 21 ஆண்டு நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில் நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, அந்த நினைவு சின்னத்தில் இன்று நடைபெற்றது.வெலிங்டன் எம்.ஆர்.சி.(மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர்) ராணுவ மைய கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங், போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

உயிருடன் மீட்டது மகிழ்ச்சி

தொடர்ந்து ராணுவ அதிகாரிகள், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

 நிகழ்ச்சிக்கு பிறகு வெலிங்டன் ராணுவ மைய கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மலை இடுக்கில் சிக்கிய வாலிபரை மீட்க வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து அதிகாரிகள், வீரர்கள் என 5 பேர் மீட்பு பணிக்காக சென்றனர். சிறப்பு மலையேற்ற பயிற்சி பெற்ற நமது வீரர்கள் 4 மணி நேரத்தில் வாலிபரை மீட்டது பாராட்டுக்குரியது. அவரை உயிருடன் மீட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஆர்.சி. வீரர்கள் தங்களது கடமையை சிறப்பாக ஆற்றி உள்ளனர் என்றார்.

மலர்களால் அலங்கரிப்பு

முன்னதாக போர் நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததோடு, ராணுவ வீரர் ராமகிருஷ்ணனின் படம் வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஆத்மநாதன், தேசிய மாணவர் படை கர்னல் சீனிவாஸ், ராமகிருஷ்ணனின் தாயார் சுப்புலட்சுமி, முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். 

ஆரம்பத்தில் அந்த நினைவு சின்னத்தை, சுப்புலட்சுமி பராமரித்து வந்தார். தற்போது முன்னாள் ராணுவ வீரர்கள் பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story