ராமேசுவரம் ரெயில் நிலைய வாசலில் அமர்ந்து ஏராளமான மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் ரெயில் நிலைய வாசலில் அமர்ந்து ஏராளமான மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
ராமேசுவரம்,
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் ரெயில் நிலைய வாசலில் அமர்ந்து ஏராளமான மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம்
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட தமிழக கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 படகுகள் மற்றும் 11 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் அனைத்து விசைப்படகு மீனவர்கள், மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பிருந்து ரெயில் நிலையம் நோக்கி போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர்.
மேலும் தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கையில் ஏலம் விட்டதை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.
வாசலில் போராட்டம்
ஊர்வலமாக சென்ற போது மத்திய-மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர். தேவர் சிலை, தனுஷ்கோடி சாலை வழியாக ரெயில் நிலைய நுழைவுப்பகுதிக்கு வந்தனர். ஆனால் அங்கு கூடுதல் சூப்பிரண்டு தீபக்சிவாஜ் தலைமையில் ஏராளமான போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்து அங்கு நின்றிருந்தனர். மீனவர்களிடம், ரெயில் நிலையத்திற்கு சென்று போராட்டம் நடத்த அனுமதி கிடையாது எனக்கூறி அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனால் மீனவர்கள் ரெயில் நிலையத்தின் முன்வாசல் வரையிலாவது செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதன்உள்ளே நுழைய மாட்டோம் எனவும் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக அங்கு நின்றபடி இலங்கை அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் போஸ், தேவதாஸ், சேசு ராஜன், எமரிட் சகாயம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.பி.ராயப்பன், மீனவர் மகளிர் அணி தலைவி இருதய மேரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கு அனைவரும் அமர்ந்து, மாலை 5 மணி வரையிலும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாதுகாப்பு
அதன் பின்னர் போலீசார், ெரயில் நிலையத்திற்குள் செல்லக்கூடாது என அனுமதித்ததை தொடர்ந்து, ரெயில் நிலைய கட்டிடத்தின் வாசல் பகுதி வரை சென்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
மீனவர்கள் போராட்டத்தையொட்டி ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதி, பிளாட்பாரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுமார் 300-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story