மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
விழுப்புரம் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளில் உள்ள 102 நகரமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் உள்ள 108 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இத்தேர்தல் 346 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது. இதில் மாவட்டத்தில் 210 பதவியிடங்களுக்கு மொத்தம் 935 பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். இதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டன.
சின்னங்கள் பொருத்தும் பணி
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணிகள் தற்போது 3 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 7 பேரூராட்சி அலுவலகங்களிலும் மும்முரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்களை பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியில் தேர்தல் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் மற்ற 9 இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பொது பார்வையாளர், வட்டார பார்வையாளர்கள், நகராட்சி, பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவ்வப்போது பார்வையிட்டு வருகின்றனர்.
இப்பணிகள் முடிவடைந்ததும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தயாராக மின்னணு வாக்குப்பதிவு எந்திரமான பேலட் யூனிட், கட்டுப்பாட்டு எந்திரமான கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றை பொருத்தி சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். அதன் பிறகு பாதுகாப்பாக ஒரு பெட்டியில் அந்த எந்திரங்களை வைத்து அந்த பெட்டிக்கு சீல் வைக்கப்படும். தேர்தலுக்கு முந்தைய நாளான வருகிற 18-ந் தேதி பகல் 12 மணி முதல் இந்த எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story