சூளகிரி அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானை அட்டகாசம்


சூளகிரி அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 11 Feb 2022 10:55 PM IST (Updated: 11 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானை பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தது

சூளகிரி:
சூளகிரி அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானை பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தது.
காட்டுயானை அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை சானமாவு மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுற்றித்திரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து, சூளகிரி அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, முட்டைக்கோஸ் மற்றும் மாஞ்செடிகளை கால்களால் மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தது.
இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் விடிய, விடிய யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த காட்டுயானை, காட்டுக்குள் போவதும், மீண்டும் வெளியே வருவதுமாக போக்கு காட்டிக்கொண்டே இருந்தது. பின்னர் அங்குள்ள ஒரு மாந்தோப்பில் யானை பதுங்கி கொண்டது.
எச்சரிக்கை
இதனால் கவலை அடைந்த விவசாயிகள் அந்த யானையை, காட்டுப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் போடூர், ராமாபுரம், ஆழியாளம், நாயக்கனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். காட்டை ஒட்டிய பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி செல்லக்கூடாது. மேலும் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story