கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து உள்ளன.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து உள்ளன.
பலத்த மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று திடீரென மழை பெய்தது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு பிறகு பலத்த மழை பெய்ய தொடங்கியது. மதியம் 12 மணி வரை நீடித்த கனமழை தொடர்ந்து விட்டு விட்டு தூறல் மழையாக பெய்தது. இந்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பாதிக்கப்படலாம் என விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர். மேலும் அறுவடை செய்யப்பட்டு களத்துமேட்டில் வைக்கப்பட்டிருந்த நெல் மணிகளும் மழையில் நனைந்தன.
கொள்முதல் நிலையம்
மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. நெல் மூட்டைகளை காப்பாற்ற கொள்முதல் நிலைய ஊழியர்கள் பிளாஸ்டிக் தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பெரும்பாலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டன.
இதைப்போல மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான பிளாஸ்டிக் தார்பாய்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story