3 சிறுமி திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
திருப்பூரில் 3 சிறுமி திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர்
திருப்பூரில் 3 சிறுமி திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
குழந்தை திருமணங்கள்
திருப்பூர் மாநகரில் கோல்டன்நகர், சாமுண்டிபுரம் பகுதியில் 18 வயது பூர்த்தி அடையாத 2 சிறுமிகளுக்கு திருமணம் நடப்பதாக நேற்று முன் தினம் இரவு சைல்டு லைன் அமைப்பினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசார் உதவியுடன் கோல்டன் நகர் மற்றும் சாமுண்டிபுரம் பகுதிக்கு சென்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்களுக்கு 17 வயதுடைய 2 சிறுமிகளை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இரு வீட்டாரின் சம்மதத்தோடு பெற்றோர் முன்னிலையில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். பெண் கிடைக்காததால் புரோக்கர் மூலமாக பெண் தேடியதாகவும், இந்த சிறுமிகள் மதுரை, திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுள்ளனர். இருப்பினும் சிறுமிகளை மீட்டு திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் 2 வீட்டாரையும் அழைத்து பேசி, 18 வயது முடிந்த பின்பு திருமணம் செய்து கொடுப்பதாக உறுதிமொழி எழுதி பெற்றனர்.
பரபரப்பு
இதுபோல் நேற்று காலை கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பகுதியில் நடக்க இருந்த சிறுமி திருமணத்தையும் சைல்டுலைன் அமைப்பினர் வடக்கு போலீசார் உதவியுடன் அதிகாலையில் சென்று தடுத்து நிறுத்தினார்கள். 30 வயது மதிக்கத்தக்க வாலிபருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திருமணம் நடத்த இருவீட்டு பெற்றோரும் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் சிறுமியை மீட்டு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா முன்னிலையில் ஒப்படைத்தனர். அவர்களிடம் உறுதிமொழி எழுதி வாங்கி அறிவுரை வழங்கினார்கள்.
பின்னர் மீட்கப்பட்ட 3 சிறுமிகளையும் குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமத்திடம் ஒப்படைத்து பின்னர் அவரவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் மாநகரில் 3 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story