அனுமதியில்லாமல் அமைத்த குடிநீர் குழாய்களை துண்டிக்க வந்தவர்களை முற்றுகை
ஆரணியில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை அகற்ற வந்தவர்களை முற்றுகையிட்ட பெண்கள் மற்றும் அதிகாரிகள் மீது மண்எண்ணெய் ஊற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணியில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை அகற்ற வந்தவர்களை முற்றுகையிட்ட பெண்கள் மற்றும் அதிகாரிகள் மீது மண்எண்ணெய் ஊற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆழ்துளை கிணறு பழுது
ஆரணி 1-வது வார்டு மணியம்மை தெரு அருகாமையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மோட்டார் பழுதடைந்து விட்டது. பல மாதங்களாகியும் நகராட்சி நிர்வாகம் அதனை சரி செய்யவில்லை.
மேலும் குழாய் தண்ணீர் கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கமண்டல நாக நதி ஆற்றங்கரையில் இருந்து நகராட்சி அலுவலகம் உள்ள நீரேற்றும் நிலையத்திற்கு பதிக்கப்பட்ட குழாயில் 2 இடங்களில் துளையிட்டு பொது குழாய் அமைத்ததாக கூறப்படுகிறது.
அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட அந்த குடிநீர் குழாய்களை அகற்ற நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று காலை நகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன், பொறியாளர் மெக்கானிக் ஜெகன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட குழாய் இணைப்பினை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
முற்றுகை
ஆழ்துைள கிணறு மின்மோட்டாரை அதிகாரிகள் சரி செய்து கொடுக்காமலும் தாங்களே அமைத்த குடிநீர் குழாயை அகற்ற வந்ததாலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள், தேர்தல் நடக்க உள்ள நிலையில் எங்களை எந்த அரசியல் கட்சியினரும் சந்திக்க வேண்டாம், நாங்கள் யாருக்கும் வாக்களிக்கவும் முன்வரவில்லை என கோஷங்கள் எழுப்பினர்.
சிறிது நேரத்தில் அங்கிருந்து ஒருவர் கேனுடன் உள்ளே நுழைந்து அதிகாரிகள் மீதும் அங்கு கூடியிருந்த பெண்கள் மீதும் மண்எண்ணெயை ஊற்றினார்.
பரபரப்பு
தீ வைத்து விடலாம் என அஞ்சிய அதிகாரிகள், பணியாளர்கள் கூச்சலிட்டவாறு அந்த இடத்திலிருந்து அகன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு திரண்டிருந்தவர்களை கலைந்துபோக செய்தனர்.
Related Tags :
Next Story