தேர்தலின்போது அளித்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட தி.மு.க.முழுமையாக நிறைவேற்றவில்லை என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
7 வாக்குறுதிகளை கூட திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
திருவண்ணாமலை
தேர்தலின்போது அளித்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட தி.மு.க.முழுமையாக நிறைவேற்றவில்லை என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பிரசார கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் 24 வேட்பாளர்களும், செங்கம் பேரூராட்சியில் 3, கீழ்பென்னாத்தூர் வேட்டவலம், புதுப்பாளையம் பேரூராட்சிகளில் தலா 5 வேட்பாளர்களும் என 42 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் பா.ஜ.க.தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.
இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து 8 மாதங்களில் தமிழகம் இன்னொரு தேர்தலை சந்திக்கிறது. இது முக்கியமான தேர்தலாகும்.
8 மாத காலமாக தமிழகத்தில் தி.மு.க.வின் ஆட்சியை பார்த்து கொண்டு இருக்கின்றோம். நகை கடனை தள்ளுபடி செய்யவில்லை. மேலும் மாதாமாதம் ரூ.1000 கொடுப்பதாக சொன்னார்கள். அதுவும் வரவில்லை. 517 வாக்குறுதிகளை தேர்தலின் போது கொடுத்திருந்தார்கள். இதில் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.
சண்டையை ஏற்படுத்துபவர்
தமிழக நலனில் அக்கறை இல்லாதவர் நம்முடைய முதல்- அமைச்சர். எதற்கெடுத்தாலும் மத்திய, மாநில அரசுக்கு இடையே சண்டையை ஏற்படுத்துபவர்.
சென்னையில் பா.ஜ.க.அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ‘நீட்’ தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசியதாக கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவர், போலீஸ் நிலையத்தில் ரவுடியாக இருக்கக் கூடியவர், 7 வழக்குகளில் தொடர்புடையவர் பா.ஜ.க.அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசியதாக கதையை சொல்கிறார்கள்.
‘நீட்’ தேர்வினால் ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் பலர் மருத்துவ படிப்பிற்கு சென்று உள்ளனர். மக்களின் வாழ்வின் மாற்றத்தை கொண்டு வருவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வருகின்றது. இங்கு இருக்கும் வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்பவர்கள். இவர்களுக்கு ஓட்டுபோட்டால் தான் மக்களுக்கு சேவை செய்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாமி தரிசனம்
பிரசார கூட்டத்தில் கட்சியின் தமிழக மேலிட இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மாவட்ட பார்வையாளர் அருள், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உள்பட வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story