தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
காரைக்குடி பகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்தன.
காரைக்குடி,
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய 4 நகராட்சிகளுக்கும், இளையான்குடி, நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 11 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காரைக்குடி நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பேரூராட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள அரசு தேர்தல் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 2-வது கட்ட பயிற்சி வகுப்பு காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் மகரிஷி மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அலுவலர்களுக்கு வாக்கு பதிவின் போது மின்னணு வாக்கு எந்திரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வாக்காளர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை எவ்வாறு வழங்க வேண்டும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தை எவ்வாறு அறிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. முன்னதாக தேர்தலில் பணியாற்ற உள்ள அரசு அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story