நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி முற்றுகை போராட்டம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் சிறியதாகவும், தெளிவு இல்லாமலும் இருப்பதாக கூறி அக்கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் சிறியதாகவும், தெளிவு இல்லாமலும் இருப்பதாக கூறி அக்கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
புகார்
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 776 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், மின்னணு வாக்குப்பதிவுஎந்திரங்களில் தங்களது கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி மற்ற சின்னங்களை விட மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் அச்சிடப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
அதன் பிறகு நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா மனோகர், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் மற்றும் கட்சி வேட்பாளர்கள் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு தரையில் அமர்ந்துதர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடியிடம் சென்று மனு கொடுத்தனர்.
சிறியதாக அச்சிடப்பட்ட சின்னம்
அந்த மனுவில், ‘நாம் தமிழர் கட்சியின் சின்னம் மற்றசின்னங்களை விட மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் திட்டமிட்டு அச்சிடப்பட்டுள்ளது. இதை மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் ‘தேர்தல் ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்ட சின்னங்களையே அச்சிட்டு வழங்கியுள்ளோம்’ என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story