காங்கிரசை நினைத்து பிரதமர் மோடி பயப்படுகிறார்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி


காங்கிரசை நினைத்து பிரதமர் மோடி பயப்படுகிறார்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2022 12:05 AM IST (Updated: 12 Feb 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

5 மாநில தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும். காங்கிரசை நினைத்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை நகரசபைக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை போல தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். நீட் விவகாரத்தை பல கோணத்தில் பார்க்க வேண்டும். என்னை பொருத்தவரை மாநில அரசு நடத்தும் கல்லூரிக்கு மத்திய அரசு தேர்வு நடத்தலாமா என்று கேட்டால் வேண்டாம் என்றுதான் சொல்வேன். 
ஆனால் மருத்துவ கல்லூரிக்கு எப்படி இடம் ஒதுக்க வேண்டும்.அது பிளஸ்-2 மதிப்பெண்ணை வைத்தா அல்லது நுழைவுத்தேர்வு வைத்தா என்பதை முடிவு செய்யவேண்டியது கல்வியாளர்கள் என்று தான் கூறுவேன். அதில் நுழைவுத்தேர்வுகளில் வைத்துதான் என்றால் அதை செய்ய வேண்டியது மாநில அரசுதான். மத்திய அரசின் இந்தி, இந்துத்துவா கொள்கையை எல்லா காலத்திலும் தமிழக மக்கள் நிராகரித்து தான் வந்துள்ளார்கள். 
5 மாநில தேர்தலில் பஞ்சாப், உத்தரகாண்ட், மற்றும் கோவாவில் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன். ஜனாதிபதியின் உரைக்கு பதில் சொல்வதற்காக பிரதம மந்திரி நாடாளுமன்றத்திற்கு வருகிறார்.ஆனால் அவர் அதற்கு பதில் சொல்லாமல் பா.ஜ.க மேடைப் பேச்சாளரை போல் காங்கிரஸ் கட்சி இதை செய்யவில்லை அதை செய்யவில்லை என்று பேசினார். காங்கிரசைப் பற்றியேதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அவரது பயம் தான் இதில் வெளிவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story