நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் மும்முரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி மற்றும் அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து வேட்பாளர்களுக்கான பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணி, கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில், மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சின்னம் பொருத்தும் பணி
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பெயர், சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது வேட்பாளர்களும் உடன் இருந்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்வதற்காக பெங்களூருவில் இருந்து பெல் நிறுவன என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வருகிற 16-ந்தேதிக்குள் மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி முடிவடைய வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். இதனால் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story