தமிழர் நீதிக்கட்சி நிறுவனரின் கார் மீது துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டு வீச்சு


தமிழர் நீதிக்கட்சி நிறுவனரின் கார் மீது துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டு வீச்சு
x
தினத்தந்தி 12 Feb 2022 2:39 AM IST (Updated: 12 Feb 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழர் நீதிக்கட்சி நிறுவனரின் கார் மீது துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டு வீசப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

கொலை முயற்சி
அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சுபா இளவரசன். தமிழர் நீதிக் கட்சியின் நிறுவனரான இவர் தற்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று இவர் வந்த கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீசில் சுபா இளவரசன் புகார் அளித்தார். அதில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு உடையார்பாளையத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் துளாரங்குறிச்சி பைபாஸ் பிரிவு சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல், எனது கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் வந்துவிட்டோம்.
பாதுகாப்பு வழங்க வேண்டும்
எனவே துப்பாக்கியாலும், வெடிகுண்டுகளாலும் தாக்கிய நபர்கள் மீது, ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு சட்டத்தின் கீழும், சதித்திட்டம் தீட்டி கொலை செய்ய முற்பட்டவர்கள் என கொலை முயற்சி பிரிவின் கீழும் வழக்குப்பதிந்து மேற்படி நபர்களை கைது செய்ய வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆகியோர் சுபா இளவரசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story