ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம்
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடந்தது.
ஈரோடு
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் சாமி சிலைகள் அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடந்தது.
சாமி சிலைகள் அகற்றம்
ஈரோடு கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கன்னிமார் கருப்பராயன் கோவில் உள்ளது. சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு சுற்றிலும் இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலில் வழிபாட்டு வந்தனர்.
இதற்கிடையில் 5 பேரில் ஒருவருக்கு தனியாக சொந்தமான நிலம் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது. கோவில் அருகில் உள்ளதால் தன்னுடைய நிலத்தின் மதிப்பு உயரவில்லை என்று கூறி நேற்று முன்தினம் மாலை கோவிலில் உள்ள கற்களால் ஆன சாமி சிலைகளை அங்குள்ள புறம்போக்கு இடத்தில் வைத்து விட்டு, இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அவர் அகற்றி உள்ளார். மேலும் அங்கிருந்த சில மரங்களையும் வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு பக்தர்கள் வழிபட வந்தபோது சாமி சிலைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் கோவில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கோவில் அமைந்துள்ள இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மற்றும் சூரம்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
Related Tags :
Next Story