இந்து மாணவர்களுக்கு நிகராக எதிர் கோஷமிட்ட முஸ்லிம் மாணவிக்கு மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரிசு


இந்து மாணவர்களுக்கு நிகராக எதிர் கோஷமிட்ட முஸ்லிம் மாணவிக்கு மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரிசு
x
தினத்தந்தி 12 Feb 2022 2:57 AM IST (Updated: 12 Feb 2022 2:57 AM IST)
t-max-icont-min-icon

இந்து மாணவர்களுக்கு நிகராக எதிர் கோஷமிட்ட முஸ்லிம் மாணவிக்கு மராட்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார். மேலும் மாணவி மீது போலீஸ் சூப்பிரண்டிடம் இந்து அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மண்டியா:

‘ஹிஜாப்’ விவகாரம்

  கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 8-ந் தேதி மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் ‘ஹிஜாப்’ விவகாரம் தொடர்பாக இந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள பி.யூ. அரசு கல்லூரிக்கு ஒரு முஸ்லிம் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்தபடி தனது ஸ்கூட்டரில் வந்தார். அவர் ஸ்கூட்டரை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அவரை சூழ்ந்து கொண்ட மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டனர். அப்போது மாணவி முஸ்கான் பதற்றம் அடையாமல் மாணவர்களுக்கு நிகராக ‘அல்லாகூ அக்பர், அல்லாகூ அக்பர்’ என்று எதிர் கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆதரவும், எதிர்ப்பும்...

  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனி ஆளாக நின்று மாணவர்களுக்கு நிகராக எதிர் கோஷமிட்ட முஸ்லிம் மாணவி முஸ்கானுக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு மராட்டிய மாநில பாந்த்ரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜீசன் சித்திக் நேரில் சென்று முஸ்கானை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

  மேலும் அவர் முஸ்கானுக்கு விலை உயர்ந்த செல்போன், கைக்கெடிகாரம் ஆகியவற்றை பரிசாக வழங்கினார். அதேபோல் சி.எம்.இப்ராகிம் எம்.எல்.சி.யும் மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதுதவிர மாணவிக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளில் இருந்து மொத்தமாக ரூ.5 லட்சம் வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளன.

  இதுபற்றி மாணவி முஸ்கான் கூறுகையில், ‘‘ஹிஜாப் அணிவது எங்கள் கலாசாரம். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் கலாசாரம் முக்கியம். நான் கல்லூரிக்கு சென்ற போது சில மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். இது அவர்களின் மத அடையாளம். அதுபோல் நானும் பதிலுக்கு அல்லாகூ அக்பர் என கோஷமிட்டேன். இதில் எந்த தவறும் இல்லை. அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஹிஜாப் அணிய ஐகோர்ட்டு தடை விதித்து இருப்பது கடினமான விஷயம். எனக்கு சில அமைப்பினர் ரூ.5 லட்சம் தருவதாக சமூகவலைத்தளங்களில் தான் தகவல் பரவி வருகிறது. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்றார்.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

  இந்த நிலையில் இதுதொடர்பாக மண்டியாவைச் சேர்ந்த நரேந்திர மோதி விசார் மஞ்ச் எனும் இந்து அமைப்பினர் மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபாலை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதில் மாணவி மீதும், அவருக்கு ஆதரவு தெரிவிப்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Next Story