கர்நாடகத்தில் வன்முறையால் மூடப்பட்ட பள்ளி-கல்லூரிகள் 14-ந்தேதி திறப்பு; கலெக்டர்களுடன் முதல்-மந்திரி ஆலோசனை


கர்நாடகத்தில் வன்முறையால் மூடப்பட்ட பள்ளி-கல்லூரிகள் 14-ந்தேதி திறப்பு; கலெக்டர்களுடன் முதல்-மந்திரி ஆலோசனை
x
தினத்தந்தி 12 Feb 2022 3:16 AM IST (Updated: 12 Feb 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையால் மூடப்பட்ட பள்ளி-கல்லூரிகள் 14-ந்தேதி திறக்கப்படுவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

பெங்களூரு:

மனுக்கள் மீது விசாரணை

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவ-மாணவிகளும் காவி துண்டு போட்டு வந்தனர். அதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதை கண்டித்து இரு தரப்பினரும் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து பள்ளி-கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

  இதற்கிடையே முஸ்லிம் மாணவிகள், தாங்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அனுமதிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை முதலில் விசாரித்த தனி நீதிபதி, இதை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றினார். அதன்படி தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டன.

கலெக்டர்களுடன் ஆலோசனை

  இதில், மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைடுத்து உயர்நிலை பள்ளிகள் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

  இந்த நிலையில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், 14-ந் தேதி உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் இருந்தபடி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

  இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விரும்பத்தகாத நிகழ்வுகள்

  இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

  கர்நாடகத்தில் மாணவர்களின் போராட்டத்தால் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு தெரியும். ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் உயர்நிலை பள்ளிகள் வருகிற 14-ந் தேதி முதல் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் எந்தவிதமான விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது. அதற்கு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சிறிய சம்பவங்கள்

  பதற்றமான மாவட்டங்களில் உள்ள முக்கியமான பள்ளி-கல்லூரிகளுக்கு கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நிர்வாக குழுவினருடன் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துரையாட வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பள்ளி நிர்வாகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

  கலெக்டர்கள் உள்பட உயர் அதிகாரிகள் மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி கூட்டங்களை நடத்தி ஐகோர்ட்டு உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும். எந்தவிதமான அழுத்தத்திற்கும் அடிபணியக்கூடாது. சிறிய சம்பவங்களை கூட பெரிதாக எடுத்து அதை தொடக்க நிலையிலேயே சரிசெய்ய வேண்டும்.

அமைதியை ஏற்படுத்த...

  முன்னுரிமை அடிப்படையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டங்களை நடத்த வேண்டும். அதிகாரிகள் பகுதிகளை பிரித்து கொண்டு, வெளியாட்கள் வந்து தூண்டிவிடும் நிகழ்வுகளை தடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத தலைவர்களின் நம்பிக்கையை பெற்று அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பிரச்சினைகளை தூண்டிவிடுபவர்களை கண்காணிக்க வேண்டும். உள்ளூர் அளவில் அனைத்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அனைவரும் ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சமூகவிரோதிகளை கண்காணிக்க வேண்டும்

  சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை கண்காணிக்க வேண்டும். மேல் அதிகாரிகளிடம் இருந்து அனுமதிக்காக காத்திருக்காமல் நீங்களே முடிவு எடுத்து நிலைமையை சமாளிக்க வேண்டும். மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவறான தகவல் மக்களுக்கு செல்லாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பேசினார்.

Next Story