கோவில்களில் திருடிய தந்தை-மகன் சிக்கினர்-11¾ பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு


கோவில்களில் திருடிய தந்தை-மகன் சிக்கினர்-11¾ பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 3:20 AM IST (Updated: 12 Feb 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கோவில்களில் திருடிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11¾ பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.

ஓமலூர்:
ஓமலூர் அருகே கோவில்களில் திருடிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11¾ பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டன.
கோவிலில் திருட்டு
ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி ஊராட்சி பனங்காடு பகுதியில் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி சாமி கருவறை பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த 2¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது. கோவிலின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தந்தை-மகன்
அப்போது அந்த வழியாக வந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய  தீவிர விசாரணையில், அவர்கள் தாரமங்கலம் சிக்கம்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்த உமேஷ் நாயுடு (வயது 40), அவருடைய மகன் திராஜ் (19) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் பனங்காடு சென்றாயபெருமாள் கோவிலில் 2¾ பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். 
மேலும் இவர்கள் இருவரும், மகுடஞ்சாவடியில் ஒரு கோவிலில் 6 பவுன் நகை மற்றும் 250 கிராம் வெள்ளி பொருட்களையும், தாரமங்கலம் பகுதியில் உள்ள கோவிலில் 4 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடியதும் தெரியவந்தது. 
கைது
இதையடுத்து அவர்களிடம் இருந்து 11¾ பவுன் தங்க நகை மற்றும் 4 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இதையடுத்து உமேஷ்நாயுடு, அவருடைய மகன் திராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story