சேலத்தில் ஆலோசனை கூட்டம்: வேட்பாளர்களை பறக்கும்படை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்-கலெக்டர் கார்மேகம் உத்தரவு
சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்களை பறக்கும்படை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
சேலம்:
சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர்களை பறக்கும்படை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 1,519 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 38 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 87 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிவுரைகள்
மேலும், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு விதிமுறைகளை பின்பற்றுவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் 63 கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை அலுவலர்கள் தேர்தல் தொடர்பான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
வாகன தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்யலாம். அதுபற்றிய தகவல் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமுதவள்ளி (கணக்கு), தாமஸ் ராஜன் (உள்ளாட்சி தேர்தல்) உள்பட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story