சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் கொண்டு வரப்பட்ட ரூ.4¼ கோடி நகைகள் பறிமுதல்
சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் கொண்டு வரப்பட்ட ரூ.4 கோடியே 39 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூரமங்கலம்:
சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் கொண்டு வரப்பட்ட ரூ.4 கோடியே 39 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் நகைகள் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ரெட்டிப்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த துணை மாநில வரி அலுவலரும், மேலாளருமான ராஜா தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி, பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
8 கிலோ தங்கம்
அந்த காரின் பின்புறத்தில் ஒரு பை இருந்தது. அந்த பையை திறந்து பார்த்த போது அதில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.4 கோடியே 39 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த சர்வான் சிங் (வயது 35), பகான் சிங் (29) என்பதும், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர்கள் சென்னையில் இருந்து சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள நகைக்கடைக்கு நகைகளை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் நகையை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி ராஜா அந்த நகைகளை பறிமுதல் செய்தார். பின்னர் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிபிசக்கரவர்த்தியிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து நகைகள் சேலம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.
Related Tags :
Next Story